விவசாயத்திற்கு கூலி ஆட்கள் தட்டுப்பாட்டை போக்க விவசாயிகள் இயந்திர நடவுக்கு மாறி வருகின்றனர். கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் இயந்திர நடவு மூலம் கார் பருவ நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும்.
வழக்கமாக ஜூன் 1ம் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இதை எதிர்பார்த்து பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை குறித்த காலத்திற்கு ஒரு வாரம் முன்பே தொடங்கியது. கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கார் பருவ நெல் சாகுபடிக்கு பாபநாசம் அணை ஜூன் 3ம் தேதி குறித்த காலத்தில் திறக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, பாபநாசம் அணையில் 132.95 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1127 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 135.82 அடியாக உள்ளது. அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், பத்தமடை, வெள்ளங்குழி, வீரவநல்லூர் பகுதிகளில் விவசாயிகள் கார் பருவ நெல் சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போது நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்தி தங்களது விளைநிலங்களில் நடவு செய்து வருகின்றனர். நாற்று நடும் பணிகளுக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு, நேரம் அதிகம் ஆகியவற்றை போக்குவதற்காக இயந்திர நடவை நாடி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கர் இயந்திரம் மூலம் நடவு செய்யும் பணிக்கு விதை நெல்லும், ரூ.3 ஆயிரத்து 700ம் கொடுத்தால் நடவு செய்து விடுகின்றனர். இதன் மூலம் நேரமும் மிச்சமாகிறது. கூலி ஆட்கள் தட்டுப்பாடு இல்லை.
கார் பருவ நெல் சாகுபடிக்கு குறித்த காலத்தில் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. அணையில் தற்போது நீர் இருப்பு அதிகம் உள்ள நிலையில் கார் பருவ நெல் சாகுடியை எளிதாக முடித்து விடலாம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.