
Drinking competition
ஜப்பானில் பெற்றோர்களை விட இன்றைய இளம் தலைமுறையினர் குறைவாக குடிப்பதால், அவர்களிடம் மதுபான நுகர்வை அதிகப்படுத்தும் ஐடியாக்களை தெரிவிக்கும் போட்டியினை அந்நாட்டின் தேசிய வரி முகமை தொடங்கியுள்ளது. ஜப்பான் அரசின் இத்திட்டத்திற்கு அந்நாட்டினர் பலரும் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். ஜப்பானில் கோவிட் பெருந்தொற்றினால் 40+ வயதினர் குடிப்பதை குறைத்துக் கொண்டனர். இதனால் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் பெருமளவு குறைந்தது.
மது குடிக்கும் போட்டி (Drinking Competition)
கோவிட், பிறப்பு விகிதம் குறைந்தது, வயதானவர்கள் எண்ணிக்கை பெருகியது ஆகியவை இந்த சரிவுக்கு காரணம் என்கின்றனர். ஜப்பானில் 3ல் ஒரு பங்கினரின் வயது சராசரியாக 65 ஆகும். இந்நிலையில் 2020ல் மதுபான வருவாய் 6 ஆயிரம் கோடி ரூபாயாக ஆனது. அதற்கு முந்தைய ஆண்டில் மதுபானம் மூலமான வருவாய் 66 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. 1989க்கு பிறகு ஜப்பானில் மது விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வீழ்ச்சியை இது குறிக்கிறது.
2020க்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக நூறு லிட்டர் மதுபானங்கள் அருந்தியவர்கள், தற்போது 75 லிட்டர் தான் அருந்துகிறார்களாம். இதனால் ஜப்பான் அரசு தங்கள் நாட்டு இளைஞர்களிடம் மதுபான விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக “சாக்கே விவா” பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
சாக்கே விவா (Sakke viva)
சாக்கே என்பது ஜப்பானிய மதுபான வகையாகும். இது அரிசியை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. தண்ணீர் போன்று காணப்படும் இந்த பானம் ஒயினை விட அதிக ஆல்கஹால் கொண்டது. இந்த சாக்கே விவாவின் ஒரு பகுதியாக 20 முதல் 39 வயதினர் எப்படி எல்லாம் மீண்டும் மதுபான விற்பனையை அதிகப்படுத்தலாம் என்ற பிசினஸ் ஐடியாக்களை கூற வேண்டும்.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் இளைஞர்கள் மது விற்பனையை கூட்டும் விளம்பரம், பிராண்டிங், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்துவது போன்ற ஐடியாக்களை கூற வேண்டும். செப்டம்பர் வரை இந்த போட்டி நடைபெறும் அதற்குள் தங்களது ஐடியாக்களை வழங்கலாம். அதில் சிறந்த திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை நிபுணர்கள் கொண்டு மேம்படுத்தப்படும். அதன் இறுதி திட்ட அறிக்கை நவம்பர் மாதம் அரசுக்கு சமர்பிக்கப்படும்.
மேலும் படிக்க
Share your comments